புதுடெல்லி: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் தெலங்கானா முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். கடந்த 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். 16-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த வழக்கில் கைது செய்ய தடை விதிக்க கோரியும் சம்மனை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கவிதா கோரிக்கை வைத்திருந்தார். இதை நிராகரித்த அமலாக்கத் துறை, 20-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.
இதன்படி நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் 2-வது முறையாக கவிதா ஆஜரானார். அப்போது, கவிதாவின் பினாமி என்று கருதப்படும் ஏற்கெனவே கைதான அருண் ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் தொடர்பாக கவிதாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.