சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி:
தமிழகத்திற்கு, 6 லட்சத்து, 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதன்படி தனி மனிதர் ஒவ்வொருவருக்கும், 90 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கடன் உள்ளது. ‘டாஸ்மாக்’ வருமானத்தை வைத்து தான் அரசு நடக்கிறதா எனில் இல்லை. மணல், கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே, அதிக வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை.
தனியாரிடம், ‘சும்மா’ ஒன்றும் தர மாட்டாங்க… அதுக்கான, ‘பிரதிபலன்’களை வாங்கிட்டு தான் குடுக்கிறாங்க!
டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேட்டி:
பெண் குழந்தைகள் மட்டுமின்றி, ஆண் குழந்தைகளும் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றன. தமிழக போலீசின் கடும் நடவடிக்கையால், தற்போது பாலியல் குற்றங்கள் குறைந்து வருகின்றன. எனினும், பாலியல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகள் மற்றும் மக்களிடம் ஏற்படுத்தும் போது தான், காலப்போக்கில், ‘போக்சோ’ குற்றங்கள் முழு அளவில் குறையும்.
சிறார்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதித்து, அதையும் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே, முழு அளவில் அந்த குற்றங்கள் குறையும்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி:
மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், சாமானிய வணிகர்களை, வேறு பார்வையிலும் பார்க்கிறது. ‘ஆன்லைன்’ வர்த்தகத்தால், சாமானிய வியாபாரிகள் தடுமாறி வருகின்றனர். வடமாநிலதொழிலாளர்கள், தமிழகத்தில்இல்லை என்றால், இங்கு உள்ள தொழில் கூடாரங்கள் காலியாகி விடும். தொழில் நிறுவனங்களில், 70 சதவீதஅளவுக்கு வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள்வருகையால, நம்ம ஊர் தொழிலாளர்கள் எல்லாம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுல கூலி வேலைக்கு போயிட்டு இருப்பதை பற்றி யாருமே பேச மாட்டேங்கிறாங்களே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு:
வன்னியர் சமுதாயத்துக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு மிகவும் குறைவு. நமக்கு, 15 சதவீதத்திற்கு மேல் கிடைக்க வேண்டும். அன்றைய ஆட்சியாளர்கள் ஏதேதோ கூறி, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக் கொள்ளச் செய்தனர். நமக்கு யாரோடும் பகையில்லை. எங்களிடம் ஒற்றுமை உள்ளது. நாங்கள் ஏழு நாட்கள் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். மீண்டும் அந்த நிலைக்கு தள்ளாதீர்கள். இந்த, 10.5 சதவீத இடஒதுக்கீடு விரைவில் நமக்கும் கிடைக்கப் போகிறது; வாங்காமல் விடமாட்டோம்.
இவர் கோரும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே ஏற்றுக் கொண்டன… ஆனா, விவகாரம் கோர்ட்டில் அல்லவா இருக்கிறது… அதனால, டாக்டர் சட்டப் போராட்டம் நடத்துவது தான் சரியாக இருக்கும்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்