“நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மகளிருக்கு உதவித்தொகை வழங்க திட்டமிட்டு இருக்கின்றனர்” என திமுக அரசை முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அம்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று விழா பேருரை ஆற்றினர். முன்னதாக சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மகளிர்க்கு தையல் எந்திரங்கள், வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் கூறுகையில், “தமிழக பட்ஜெட் காகித பூ பட்ஜெட். கனவு பட்ஜெட் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் வெறும் கனவை மட்டும் கண்டிருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கதாநாயகனாக கூறப்பட்ட ‘மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம்’, திமுக ஆட்சிக்கு வந்து 23 மாதங்கள் உருண்டோடியும் நடைமுறைப்படுத்தவில்லை. வரும் செப்டம்பர் மாதம் தான் நடைமுறைப்படுத்த போவதாக சொல்லி இருக்கிறார்கள். அதுவும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே தரப்போவதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள், தகுதியில்லா குடும்பத் தலைவிகள் என்று உண்டா? இவ்வாறு குடும்பத் தலைவிகளை பிரித்தால் இவர்கள் விரைவில் வீட்டிற்கு தான் செல்வார்கள்.
வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலின் போதே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் கூறியது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.
ஸ்டாலினின் மருமகன் நடத்தும் ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு சாதகமாகவே பத்திரப்பதிவு கட்டணம் 4 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM