தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில், 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. நெல் குவிந்தாலுக்கு ரூ.100 மட்டுமே ஊக்கத்தொகை அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதே போல் நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை.
கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் பட்ஜெட்டில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அளித்த வாக்குறுதி எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. விவசாயிகளுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதேபோல் விவசாயிகளுக்கு பெரிய திட்டங்களும் எதுவும் இல்லை அவர்களை ஏமாற்றும் வகையில் தான் உள்ளது 2 மணி நேரத்திற்கு மேல் வேளாண் பட்ஜெட் உரை வாசித்தாலும் முக்கியமான அம்சங்கள் எதுவும் இல்லை. விவசாயிகளின் பாதிப்பை அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.