சென்னை, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி (37). இவரின் மனைவி மாலதி (31). சபாபதி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சபாபதி வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டார். அவரின் மனைவி மாலதியும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய மாலதி, கதவைத் திறந்து உள்ளே சென்றார். யதேச்சையாக பீரோவைத் திறந்து பார்த்தபோது, அங்கு வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகைகள், பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவை காணாமல்போயிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த மாலதி, தன்னுடைய கணவர் சபாபதியிடம் கேட்டார். அதைக் கேட்டு அவரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் மாலதி, நகை, பணம் திருட்டுப்போனது தொடர்பாகப் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது மாலதி, வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை. ஆனால் பீரோவிலிருந்த தங்க நகை, பணம் திருட்டுப்போயிருக்கின்றன என்ற தகவலை போலீஸாரிடம் தெரிவித்தார். அதனால் போலீஸார் சம்பவத்தன்று மாலதி வீட்டுக்கு யார், யார் வந்தார்கள் என்று விசாரித்தனர். அது தொடர்பாக அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாத டூ வீலரில் மாடர்ன் டிரெஸ்ஸில் இளம்பெண் ஒருவர் அங்கு வந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அதனால் அந்த இளம்பெண்மீது போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது. அவர் யாரென்று போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்துவரும் யூடியூபர் அனீஷ் குமாரி (33) என்பவர்தான் சபாபதி வீட்டுக்கு வந்திருந்தார் என்பது தெரியவந்தது. அதையடுத்து நகை, பணம் திருட்டு தொடர்பாக அனீஷ் குமாரியிடம் விசாரித்தபோது, முதலில் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் திருடிய நகைகளைத் தன்னுடைய வீட்டின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கும் நிலுவையில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.