தஞ்சாவூரில் இளைஞரிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ரூ.2.23 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளைஞர். எம்.பி.ஏ படித்திருக்கும் இவர், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முயற்சி செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு பெண் ஒருவர் போன் செய்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர் ராங் நம்பர் எனக் கூறி போனை கட் செய்துவிட்டார்.
ஆனால் மீண்டும் போன்செய்த அந்தப் பெண் கொஞ்சும் குரலில் பேசியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து போனில் பேசி பழகிய இருவரும், போட்டோவை பரிமாறி கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெண் அந்த இளைஞரைக் காதலிப்பதாகவும், `நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ எனவும் கூறியிருக்கிறார்.
இதை உண்மையென நம்பிய அந்த இளைஞரும், தொடர்ந்து போனில் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், `எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. அதற்காக ரூ.2,23,900 கட்டச் சொல்கிறார்கள். ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை… நீ பணம் கொடுத்து உதவி செய். நாம்தான் திருமணம் செய்யப்போகிறோமே’ எனக் கேட்டிருக்கிறார்.
இதையும் உண்மை என நம்பிய அந்த இளைஞர், ஆன்லைன் மூலம் அந்தப் பெண் கேட்டப் பணத்தை அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண் சரியாகப் பேசாமல் அந்த இளைஞரைத் தவிர்த்து வந்திருக்கிறார். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீஸார், பெங்களூருவைச் சேர்ந்த சர்மிளா (27), தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (32) ஆகிய இருவரும்தான் சேர்ந்து அந்த இளைஞரை ஏமாற்றி மோசடி செய்தனர் என்பதை அறிந்து, அவர்களைக் கைதுசெய்தனர்.