திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஆட்டுச்சந்தை மிகவும் புகழ் பெற்றது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் இச்சந்தையில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவர். இவற்றை வாங்க சிவகங்கை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏராளமானோர் வருவர் இந்நிலையில் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகளின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.
தென் மாவட்டங்களில் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா சமயங்களில் ஆடு, கோழி விற்பனை கலைக்கட்டுவது வழக்கம். பங்குனி மாதம் தொடங்கியுள்ள நிலையில் திருப்புவனம் செவ்வாய்க்கிழமை சந்தையில் கால்நடைகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.6,000 தில் இருந்து ரூ.8000 ஆகவும் ரூ.200 சேவல் ரூ.400 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் திருப்புவனம் சந்தையில் குவிந்தனர்.