காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங் ‘‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’’ எனும் ‘‘ஏகேஎப்’’ தீவிரவாத குழுவை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக பஞ்சாப் போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல் துறை ஐஜி சுக்செயின் கிங் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு நிதியுதவி கிடைத்திருப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற் கில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அம்ரித்பால் சிங்குக்கு சொந்தமான இடங்களிலிருந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. மேலும், அவர் “ஏகேஎப்’’ என்ற தீவிரவாத குழுவை உருவாக்க முயன்றுள்ளதும் தேடுதல் வேட்டையின்போது தெரியவந்துள்ளது.
அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட அம்ரித்தின் நெருங்கிய கூட்டாளிகள் 114 பேரை தனிப்படைகள் தீவிர முயற்சிக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
மேலும், பலர் தேடப்பட்டு வருவதையடுத்து மொபைல் இணைய சேவை மற்றும் குறுஞ்செய்திக்கான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை செவ்வாய்க்கிழமை (இன்று) மதியம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டஒழுங்கு நிலை சீராக உள்ளதுடன் அமைதியான சூழலும் நிலவி வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் தல்ஜீத் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புகன்வாலா, பகவந்த் சிங் ஆகியோர் அசாம் மாநிலம் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமிர்த்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத்சிங்கையும் அந்த சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாடகரும், ஆர்வலருமான தீப் சித்து ‘‘வாரிஸ் பஞ்சாப் தே (பஞ்சாபின் வாரிசுகள்)’’ என்ற இயக்கத்தை உருவாக்கினார். சித்து சாலை விபத்தில் இறந்த பிறகு ஹர்ஜீத் சிங் உதவியுடன் அந்த இயக்கத்தின் தலைவரானார் அம்ரித்பால் சிங்.