புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல், ஆளும்கட்சியான பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அதுவரை நாடாளுமன்றம் நடைபெற விடமாட்டோம் என்றும் கூறி அவர்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல்மாடிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் அங்கு இருந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், அதே கோரிக்கையை வலியுறுத்தும் மிகப் பெரிய பேனரை கீழே தொங்கவிட்டபடியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி நிலவியதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.