புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் டெல்லி நிர்வாகிகள் மீதான வழக்கில் டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:
வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற பிஎஃப்ஐ இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு வியூகங்களை வகுத்து, சதித் திட்டங்களையும் தீட்டியது. நாடு முழுவதும் வாழும் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிஎஃப்ஐ சார்பில் பல்வேறு பகுதி களில் முகாம்கள் நடத்தப்பட்டு முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது.
அதோடு இந்துக்களைப் பிரிக்க சதித் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருடன் கூட்டணி அமைத்து இந்துக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் அடைய வியூகம் வகுக்கப்பட்டது.
மேலும் காவல் துறை, ராணுவம், நீதித் துறையில் ஊடுருவி இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
இந்தியாவின் வடக்குப் பகுதி யில் குழப்பம், பதற்றத்தை ஏற்படுத்தி இந்திய ராணுவத்தின் முழு கவனத்தையும் பாகிஸ்தான் ராணுவம் ஈர்க்க வேண்டும்.
அதேநேரம் தெற்குப் பகுதியில் பிஎஃப்ஐ அமைப்பு முஸ்லிம்இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி அரசுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
பிஎஃப்ஐ சார்பில் செயல்பட்ட அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கொலை செய்ய அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதன்படி கடந்த 2010-ம் ஆண்டில் கேரளாவில் பேராசிரியர் ஜோசப்பின் வலது கை வெட்டப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், இந்துத்துவா தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதையும் குழப்பத்தை ஏற்படுத்த பிஎஃப்ஐ சதி திட்டம் தீட்டியிருந்தது.
வெள்ளிக்கிழமை தொழுகை, ரம்ஜான் பண்டிகை ஆகியவற்றின் மூலம் பிஎஃப்ஐ பெருமளவில் நிதி திரட்டியது. மேலும் புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தது. இந்தப் பணம் பிஎஃப்ஐ வங்கிக் கணக்கு களில் செலுத்தப்பட்டு சமூக விரோத செயல்களுக்காக செலவிடப் பட்டது. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.