காந்திநகர்: தேசிய கல்விக்கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஒட்டுமொத்த நாட்டிலும் புதிய கல்விக்ெகாள்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மத்திய பல்கலையில் நடந்த 4வது பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
புதிய தேசிய கல்விக் கொள்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது முழு நாடும் அதை நடைமுறைப்படுத்த உழைத்து வருகிறது. பொதுவாக கல்விக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. கடந்த காலத்தில் இரண்டு தேசிய கல்விக்கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. அதிக சர்ச்சை காரணமாக அதை அமல்படுத்தும் முன் பல கமிஷன்களும் உருவாக்கப்பட்டன. அப்படி இருந்தாலும் சர்ச்சை நீடித்தது.
ஆனால் 2022ல் மோடி கொண்டு வந்த கல்விக் கொள்கைக்கு எதிராக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ முடியாது. ஒருவகையில் ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்றுக்கொண்டது. முழு நாடும் அதை செயல்படுத்த முன்னோக்கி நகர்கிறது. மோடி அரசு ெகாண்டு வந்த புதிய கல்விக்கொள்கையை ஆசிரியர்கள் படிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அதை வரிக்கு வரி படிக்கும்போது மட்டுமே அதன் தாக்கங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வியை குறுகிய சிந்தனையிலிருந்து வெளியே கொண்டு வந்து மாணவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்து கல்வி முடியும் வரை அவர்களை தேசப் பெருமித உணர்வுகளால் நிரம்பிய ஒரு முழுகுடிமகனை உருவாக்குவதே ஆகும். 130 கோடி மக்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்தால் போதும், நாடு மேன்மை அடையும். 130 கோடி மக்கள் ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்து வைத்தால் நாடு 130 கோடி அடிகள் எடுத்துவைக்கும். இவ்வாறு பேசினார்.