நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் நடைபெறவிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் காலூன்றச் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாநிலத் தலைவரான அண்ணாமலை அதிரடி அரசியல் நடத்திவருகிறார். அதனால் அவரது செயல்பாடுகளை விமர்சித்தும், ஆதரித்தும் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவருகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க-வை மட்டுமல்லாமல், தங்களின் கூட்டணியிலுள்ள அ.தி.மு.க-வையும் அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்துவருகிறார். அண்மையில் அவர், “அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாமலேயே நம்மால் வெற்றிபெற முடியும். ஆனால், தேசியத் தலைமை அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடர விரும்புகிறது. இதே போக்கு நீடித்தால், நான் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிவிடுவேன்” என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியிலிருந்து பா.ஜ.க விலகினால் தங்களுக்கு நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரே பேசியதால், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளேயும் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. மத்தியில் ஆட்சியைத் தக்கவைக்க மூத்த தலைவர்கள் முயன்றுவரும் நிலையில், அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என பா.ஜ.க-வினரே வெளிப்படையாகப் பேசினார்கள்.
`அண்ணாமலை தெரிவித்தது அவரது சொந்தக் கருத்து’ என்றும், `கூட்டணி குறித்து கட்சியின் தேசியத் தலைமையே முடிவெடுக்கும்’ எனவும் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தெரிவித்தார். அத்துடன் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் அண்ணாமலையை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்துவருவதால் கட்சித் தொண்டர்கள் குழப்பமடைந்திருக்கிறாறர்கள்.
இந்தச் சூழலில், நெல்லை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன்கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், “எங்கள் நரேந்திரரே தனித்து வா… தாமரையை தமிழகத்தில் 40-ல் மலரச் செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நெல்லையில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் பா.ஜ.க-வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. நெல்லை சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன், கூட்டணி தொடர்பாக அண்ணாமலையுடன் முரண்பட்டு நிற்பதாக பரபரக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரின் சொந்தத் தொகுதியான நெல்லையில் அண்ணாமலை கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.