சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தேடப்பட்டு வரும் அம்ரித்பால் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பை சேர்ந்த அம்ரித்பால்சிங் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக தேடியும் அவரை கைது செய்ய முடியவில்லை. இதற்காக பஞ்சாப் முழுவதும் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. அம்ரித்பாலின் நிதி தொடர்பான விஷயங்களை கவனித்து கொள்ளும் தல்ஜீத் சிங் கால்சி என்பவர் அரியானாவின் குர்கான் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். ஆனால் அம்ரித்பால் சிங் பாதுகாப்பு வாகனங்கள் சூழ ஜலந்தரின் ஷாகோட் பகுதியை நோக்கி சென்ற அவர், கடைசியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
அவரை பிடிக்க முடியாததால் அம்ரித்பால் சிங் பல தோற்றங்களில் இருப்பது போன்ற புகைப்படங்களை பஞ்சாப் போலீசார் வெளியிட்டு உள்ளனர். அவரை கைது செய்ய மக்கள் உதவிடும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டு உள்ளனர். இந்தநிலையில் பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில் கூறும்போது, ‘அம்ரித்பாலுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து உள்ளது. அவர் ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சட்டப்படி நாங்கள் வேலை செய்கிறோம். மக்களுக்கு சந்தேகங்கள் உள்ளன. ஆனால் அம்ரித்பால் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் கடைசியாக தப்பி சென்றபோது விட்டு சென்ற காரை பறிமுதல் செய்து உள்ளோம். அவருக்கு உதவி செய்த 4 பேர் மீது ஆயுத சட்டம் பதிவாகி உள்ளது’ என்று தெரிவித்து உள்ளார்.
* 80 ஆயிரம் போலீசார் என்ன செய்கிறீர்கள்? அம்ரித்பால் வழக்கு நேற்று பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,’ பஞ்சாப் மாநிலத்தில் 80 ஆயிரம் போலீசார் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள். உங்களிடம் இருந்து அம்ரித்பால் எப்படி தப்பினார்?’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.