ஸ்ரீநகர், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், ஸ்ரீநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜம்மு – காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, 2020 அக்டோபரில் கண்டுபிடித்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய புள்ளியான இர்பான் மெஹ்ராஜ் என்பவரை, ஸ்ரீநகரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து, என்.ஐ.ஏ., அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
ஜம்மு – காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா நிறுவனத்தில், 2021ல், தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேசுடன், இர்பான் மெஹ்ராஜ் இணைந்து பணியாற்றி உள்ளார்.
இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தது. மேலும், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் பயங்கரவாதத்திற்கு ஆட்களை திரட்டியது.
இந்த நிறுவனத்துடன், மற்ற அரசு சாரா நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்