பாஜகவிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது பாஜகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை எனக்கூறி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்கா தேவி தலைமையில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதே போல் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் 200- க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இருந்தனர்.
பாஜகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாகவும் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மேல் ஏற்ப்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவும் தமிழகம் முழுவதும் பாஜகவின் நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டு வந்த, தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்நாடு மாநில தலைவர் நிர்மல் குமார்
முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலையில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் பொறியாளர் கங்கா தேவி தலைமையில் பாஜகவை சேர்ந்த 80 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, பெருங்களத்தூர் பகுதி செயலாளர் ஜெ.சீனு பாபு உடன் இருந்தனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பெண் நிர்வாகிகள், பாஜகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றும், உழைப்பவர்களை மதிப்பதில்லை, பணம் இருப்பவர்களுக்கே மதிப்பு கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், “திறம்பட செயல்படும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஏற்று மாபெரும் இயக்கமான ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம். அதிமுக மட்டுமே எங்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பையும் தரும். வருகின்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க நாங்கள் பாடுபடுவோம்” என்று கூறினார்.
மேலும் இது போன்று மேலும் பல பாஜகவினர் அக்கட்சியை விட்டு விலக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.