டெல்லியில் ஸ்ரீ அன்னம் என்ற பெயரில் சிறுதானியங்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், இலங்கை, சூடான் நாட்டை சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு தபால் தலையையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயத்தையும் வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளும் கலந்து கொண்டார். 107 வயதான அவர், இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியும், பாப்பம்மாளின் காலை தொட்டு வணங்கி, அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் பாப்பம்மாளின் கைகளை பற்றி தனது நன்றியையும் தெரிவித்தார். தொடர்ந்து விவசாயி பாப்பம்மாள் பாட்டியிடம், பிரதமர் மோடி இயற்கை விவசாயம் குறித்து சில நிமிடங்கள் பேசினார்.
பிரதமர் மோடி தனது காலில் விழுந்து ஆசி வாங்கியது குறித்து பாப்பம்மாள் பாட்டி கூறியதாவது, புதுடெல்லியில் நடந்த சிறுதானிய மாநாட்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் நானும் டெல்லி சென்று அந்த மாநாட்டில் பங்கேற்றேன். எனக்கு நீண்ட நாட்களாகவே பிரதமர் மோடியை வாழ்த்தி அவருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்பினேன்.
அந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். அவரும் பதிலுக்கு எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார். இதனை நான் எதிர்பார்க்க வில்லை. இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் அவரை சால்வை அணிவித்து பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன் அது நடந்து விட்டதில் எனக்கு பெருமையும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறினார்.
இதற்கிடையே பிரதமர் மோடி, இயற்கை விவசாயியான மூதாட்டி பாப்பம்மாளிடம் காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பலரும் மகிழ்ச்சி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பாப்பம்மாள் பாட்டி சிறு வயது முதலே விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக இயற்கை முறையில் விவசாயத்தை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டு களாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கிய மான உணவு பொருட்களை உற்பத்தி செய்து, அதை உண்டு மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது இயற்கை விவசாயத்தை குறித்து அறிந்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரப்படுத்தியது.