பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மிஸ்ஸஸ் சட்டர்ஜி வெசஸ் நார்வே. இந்த படத்தில் ஒரு பெங்காலி தாய், நார்வே நாட்டில் கணவனுடன் வசித்து வரும் நிலையில் தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி அவரிடமிருந்து குழந்தைகளை பறித்து காப்பகத்தில் வைக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் உதவியோடு சட்டப் போராட்டம் நடத்தி எப்படி அந்த தாய் தனது குழந்தைகளை மீட்கிறார் என்பது தான் படத்தின் கதை. இந்த கதாபாத்திரத்தில் தான் ராணி முகர்ஜி நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ராணி முகர்ஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, தான் பிறந்தபோது மருத்துவமனையில் தன்னால் ஏற்பட்ட ஒரு குழப்பம் குறித்த வேடிக்கையான நிகழ்வு ஒன்றை கூறினார். அதாவது ராணி முகர்ஜி பிறந்தபோது அவரது தாய் அனுமதிக்கப்பட்டிருந்த அதே அறையில் இன்னொரு பஞ்சாபி பெண்ணிற்கும் பெண் குழந்தை பிறந்தது. சில மணி நேரங்கள் கழித்து பார்த்தபோது ராணி முகர்ஜியின் தாய் தன்னுடைய குழந்தை மாறி இருப்பதை கண்டுபிடித்து மருத்துவரிடம் புகார் அளித்துள்ளார்.
தனது குழந்தையின் கண்கள் பிரவுன் நிறத்தில் இருந்ததை குறிப்பிட்டு மருத்துவரின் உதவியோடு தேடியபோது அருகில் இருந்த பஞ்சாபி பெண்ணிடம் அந்த குழந்தை மாறி இருந்தது தெரிய வந்தது. அதன் பிறகு அந்த குழந்தையை (ராணி முகர்ஜியை) பெற்றோரிடம் ஒப்படைத்தனராம். அந்த பஞ்சாபி பெண்ணுக்கு அப்போது பிறந்த குழந்தையுடன் சேர்த்து மொத்தம் எட்டு பெண் குழந்தைகளாம். அதன்பின் பல நாட்கள் தான் வீட்டில் ஏதாவது கலாட்டா பண்ணினால் ஒருவேளை நீ அந்த பஞ்சாபி பெண்ணுக்கு பிறந்த குழந்தை தானோ என்று கிண்டல் அடிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார் ராணி முகர்ஜி.