புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர், நிதியமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பேசிய தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கரசூர், சேதராப்பட்டில் 750 ஏக்கர் விளைநிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் அமையாத நிலையில், முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க இடம் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார மண்டலம் அமைக்க தேர்வான இடத்தில் ஆலைகள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.