புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வராத 24 ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து அலுவலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டார். தாமதமாக வருவோருக்கு முக்கியப்பொறுப்பு தரக்கூடாது. உரிய நேரத்தில் வராதோரை பணியிடமாற்றம் தரவும் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பலர் புகார் தெரிவித்தனர். இப் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அரசு அலுவலங்களை ஆய்வு செய்து வருகின்றார். இந்நிலையில், இன்று காலை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை பதிவேட்டை எடுத்து பார்த்தபோது 50 சதவிதம் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வராதது தெரியவந்தது. அதாவது 50 பேரில் 24 பேர் பணிக்கு வரவில்லை.
மக்களின் நேரடி தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வராது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த அதிகாரிகளிடம் இனி வரும் அதிகாரிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கக்கூடாது. மேலும் உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று கட்டாய விடுப்பு அளித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஏற்கெனவே ஆய்வுக்கு சென்று அங்கும் நடவடிக்கை எடுத்த கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது அந்த அலுவலகத்தில் சரியான நேரத்தில் பணிக்கு வராத கண்காணிப்பாளருக்கு விடுப்பு அளித்து வேறு துறைக்கு மாற்ற உத்தரவிட்டார். அதேநேரத்தில் பல ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், “மக்கள் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று துறை தலைவருக்கு அறிவுறுத்தப்படும். இந்த நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பொருந்தும். பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்கப்படும்.பணிக்கு நேரத்தோடு வராதவர்களுக்கு இனி முக்கிய பொறுப்பு வழங்க கூடாது என கடிதம் அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டார்.