புதுடெல்லி: பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து, தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல், ஆளும்கட்சியான பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அதுவரை நாடாளுமன்றம் நடைபெற விடமாட்டோம் என்றும் கூறி அவர்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று ஆளும் பாஜகவும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ”நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற கருத்துகளும், தவறான குற்றச்சாட்டுக்களுமே காரணம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றன.
மாநிலங்களவை முடக்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்க அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் விடுத்த அழைப்பைக் கூட எதிர்க்கட்சிகள் மதிக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன. ஆனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
பியூஷ் கோயலுக்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ”மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் அனுமதியுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரண்டு முறை அவையில் பேச முயன்றார். ஆனால், மாநிலங்களவை ஆளும்கட்சித் தலைவரான பியூஷ் கோயல் தனது எம்பிக்களைக் கொண்டு பேசவிடாமல் தடுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவரை பேச விடாமல் செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
அதானி விவகாரம் என்பது பிரதமருடன் தொடர்புடைய ஒன்று. எனவே, இது குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ராகுல் காந்தி மீது பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரத்துடன் கூடிய ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நிலையில், அதை மறைக்க அடிப்படையற்ற ஒரு விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.