ஆவடி: போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும், இ-செல்லான் இயந்திரம், சுவைப்பிங் மெஷின் மூலமாக நேரடியாக அபராதம் செலுத்தும் திட்டத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று துவக்கி வைத்தார். இதற்காக, 100 இ-செல்லான் கருவிகள், 100 டெபிட் கார்டு கருவிகள் மற்றும் 100 கியூஆர் கோடு கருவியை, சாலை குறியீடு, போக்குவரத்து விதி மீறல் பதாகைகள், இரவு நேரங்களில் ஒளிருட்டும் எல்இடி மின்விளக்குகள் உள்ளிட்டவற்றை, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அனைத்து போக்குவரத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய மென்பொருள் வாயிலாக, பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்கு பதியலாம். இ-செல்லான் கருவிகள் இணைய வழியாக செயல்படக் கூடியது. அனைத்து வட்டாரப் போக்குவரத்து வாகன பதிவிற்கான வாகன் இணைய தளத்துடனும், ஓட்டுநர்களின் உண்மை தன்மை உறுதி செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் வழக்குகள் பதியப்படும். அவ்வழக்குகள் மூலம் அபராதம் செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் எப்.சி மற்றும் உரிமையாளர் பெயர் போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் இணை ஆணையர் விஜயகுமார், தலைமையிடம் நிர்வாகம் துணை ஆணையர் உமையாள், போக்குவரத்து துணை ஆணையர் விஜயலட்சுமி, போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் ராமச்சந்திரன், மலைச்சாமி, ஆல்டிரின் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.