விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட ப.வாகைக்குளத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டடிருக்கிறது. இந்த மதுக்கடைக்கு ஆரம்பம் முதலே அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்பையும்மீறி டாஸ்மாக் மதுக்கடை செயல்படுவதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மாதர் சங்கத்தினர் சார்பில் அந்தப் பகுதியில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்கூட ப.வாகைகுளத்தில் மதுக்கடை அருகே, மாதர் சங்கத்தின் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த நிலையில், மூடிக்கிடந்த அந்த டாஸ்மாக் கடை கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், மதுக்கடைக்கு எதிராக திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினர் உட்பட சிறுவர், சிறுமிகளும் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சுமார் 45 பெண்கள், 20 ஆண்கள் உட்பட 65 பேர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் போராட்டத்தில் கைதானவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.
ஆனால், விடுதலையாக மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாதர் சங்கத்தினரும் திருமண மண்டபத்தினுள்ளேயே மதுக்கடைக்கு எதிராக தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் சேர்ந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கட்சியினரின் தொடர் போராட்டத்தையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.