சென்னை: ஒவ்வொரு தனி மனிதரின் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை மனதில்கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘திராவிட மாடல்’ என்ற கருத்தியலுக்கு முழு எடுத்துக்காட்டாக இந்த பட்ஜெட் வெளியாகியுள்ளது. தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உதவி செய்யும் வகையிலான நலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகச் சீர்கேட்டால், ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரூ.1,000 உரிமைத் தொகையை வழங்க இயலவில்லை. நிர்வாகம், நிதியை சரிசெய்ய திமுக அரசுக்கு காலஅவகாசம் தேவைப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வரும்போது ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறையை ரூ.30,000கோடியாக குறைத்துள்ளோம். ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்துள்ளோம். தொழில் வளர்ச்சியும், வேளாண் உற்பத்தியும் பெருகியுள்ளன. மக்களின் சமூக பங்களிப்பும் அதிகரித்துள்ளது.
இதன் மூலமாக தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. இதன் அடையாளமாக நிதியும் ஓரளவு தன்னிறைவடையும் சூழல் எட்டியுள்ளது. ரூ.1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் பயின்று,உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை, குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் தேர்வாளர்களுக்கு மாதம் ரூ.7,500, அம்பேத்கர் பெயரில் தொழில்முனைவோர் திட்டம்,அயோத்திதாசப் பண்டிதர் மேம்பாட்டுத் திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம், வடசென்னை வளர்ச்சித் திட்டம், கூடுதலாக ஒரு லட்சம் பேருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை வழங்குதல், பெண் தொழில்முனைவோருக்கான புத்தொழில் இயக்கம் என அனைத்து சமூகங்கள், பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும், தமிழ்-தமிழர் அறிவு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் பட்ஜெட்டாகவும் இது அமைந்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு, கோவை மதுரையில் மெட்ரோ ரயில், சென்னையில் பேருந்து பணிமனைகள், புதிதாக 1,000 பேருந்துகள், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்குவழி மேம்பாலம், அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள், ரூ.320 கோடியில் நீர்வழிகள் தூர்வாருதல் என பல்லாயிரம் கோடி மதிப்பிலான முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் ஒவ்வொரு தனி மனிதர் நலனையும், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உளளன. மகளிர், மாணவ-மாணவிகள், இளைஞர்கள், ஏழை, விளிம்பு நிலை மக்களுக்கு உதவுவது மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் கைகொடுக்கும் பட்ஜெட் இது. இதைத்தான் ‘திராவிட மாடல்’ என்கிறோம். அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.