பொன்னேரி: மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பொன்னேரியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் மைதில். பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தந்தை அளித்த ஊக்கத்தால் நீச்சல் பயின்றார்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற 50 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் 19 வயது உடையவர்களுக்கான பிரிவில் மைதில் பங்கேற்றார். இதில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொன்னேரி பகுதியில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்த மாணவருக்கு சக மாணவர்களும், ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.