'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார்

பிரபல மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணா(54), உடல்நலக்குறைவால் கோவையில் காலமானார். சின்னத்திரை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் குணா. கோவையை சேர்ந்த இவர் கோவை குணா என்றே அழைக்கப்பட்டார்.

சின்னத்திரை மட்டுமல்லாது ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றவர்களின் குரலையும், அவர்களது உடல் மேனரிசத்தையும் அப்படியே வெளிப்படுத்தும் திறமைப்படைத்தவர்.

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் கடந்த ஓராண்டாக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று(மார்ச் 20) உயிரிழந்தார்.

குணாவின் பழைய மிமிக்கிரி காமெடி வீடியோக்களை பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.