திருவனந்தபுரம்: கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதைக் கண்டித்தும் ரப்பர் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தியும் கண்ணூர் மாவட்டம் அலகோட் பகுதியில் விவசாயிகள் பேரணி நடத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பேரணியில் தலச்சேரி மலபார் கத்தோலிக்க சர்ச் ஆர்ச் பிஷப் ஜோசப் பம்ப்லேனி பேசியதாவது: கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? மத்தியில் ஆளும் கட்சி ரப்பர் விவசாயிகள் விஷயத்தில் சாதகமாக கொள்கை முடிவெடுத்தால் விலையை உயர்த்த முடியும். அந்தக் கட்சிக்கு மலபார் கிறிஸ்தவர்கள் வாக்களிப்பார்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ரப்பர் விலையை ரூ.300 ஆக உயர்த்தினால் நாங்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க தயார். ரப்பர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் விலை வீழ்ச்சி தவிர, விவசாயிகள் மீது விலங்குகள் தாக்குதலும் அதிகமாக உள்ளது. அதற்கு முடிவு கட்டி விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பன்றிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
நாங்கள் எந்தக் கட்சிக்கும், அரசுக்கும் எதிரானவர்கள் அல்லர். ஆனால், விவசாயிகள் பாதுகாப்பாக உயிர் வாழ சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். கேரளாவில் பாஜக.வுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. இந்த நிலையில், இங்கு குடியேறிய விவசாயிகளுக்கு பாஜக பாதுகாப்பு அளித்தால், அனைவரும் பாஜக.வுக்கு வாக்களிப்பார்கள். இதன்மூலம் கேரளாவில் பாஜக.வுக்கு எம்.பி. இல்லை என்ற குறையை விவசாயிகள் தீர்த்து வைப்பார்கள். இவ்வாறு ஆர்ச் பிஷப் ஜோசப் பேசினார்.
இவரது கருத்தை கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வரவேற்றுள்ளார். ஆர்ச் பிஷப்பின் யோசனை குறித்து மத்திய அரசு சாதகமாக முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் பிஷப் ஜோசப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜோசப் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் சார்பில்தான் நான் அவ்வாறு கூறினேன். கத்தோலிக்க சர்ச் சார்பில் கூறவில்லை. மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. ரப்பர் கொள்முதல் விலை உயர்வை எந்தக் கட்சி அறிவித்தாலும் நாங்கள் வரவேற்போம் என்றுதான் பேசினேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்துவோம்: கேரளாவில் கால் பதிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பெற அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேற்றுமுன்தினம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.