சீன அதிபர் ஜின்பிங், அரசு முறைப்பயணமாக நேற்று ரஷ்யா வந்தடைந்தார். அவருக்கு, கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதின் உற்சாக வரவேற்பு அளித்தார். இருவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா போர் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்தித்துக்கொண்டது உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
4 மணி நேரத்துக்கும் மேலாக இரண்டு அதிபர்களும் பேசிக்கொண்டனர். அதன் பிறகு ரஷ்ய அதிபர் புதின், “ரஷ்யா, சீனா உறவை வலுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சீனாவின் வேகமான வளர்ச்சி என்னை பொறாமைக் கொள்ளச் செய்கிறது. உக்ரைன் போர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சீன அதிபரும், அன்பு நண்பருமான ஷி ஜின்பிங் 12 அம்ச திட்டங்களை தெரிவித்திருக்கிறார். அவரின் ஆலோசனைகளை மரியாதையுடன் பார்க்கிறோம். மேலும், உக்ரைன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக உக்ரைன் தரப்பை, ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால், சீன அதிபர் ரஷ்யா செல்வது தொடர்பாக அறிவிப்பு வந்த உடனேயே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன்,”ரஷ்யாவின் எந்தவொரு தந்திரோபாய நடவடிக்கையாலும் உலகம் ஏமாறக்கூடாது. உக்ரைன் போரை அதன் சொந்த நிபந்தனைகளில் முடக்க வேண்டும் என சீனா உள்ளிட்ட போரை ஆதரிக்கும் நாடுகள் விரும்புகின்றன. உக்ரைனில் இருக்கும் ரஷ்யப் படைகளை திரும்பப் பெறாமல், போர்நிறுத்தத்துக்கான அழைப்பு விடுப்பது ரஷ்ய வெற்றியை உறுதிப்படுத்துவதை ஆதரிப்பதாகும்.” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.