புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்சி கூட்டத்தில் பேசும்போது,, ‘‘ராகுல் காந்தியின் சமீபத்திய லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கி, அவரை எதிர்க்கட்சிகள் முகாமின் கதாநாயகனாக்க முயற்சிக்கின்றனர்’’ என்று பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அமலாக்கத் துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மம்தா விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார். இதனால் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.