லண்டன்: பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டிய அம்ரித்பால் சிங் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகுந்து அங்கிருந்த தேசியக் கொடியை அகற்றினர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பணியாற்றும் இங்கிலாந்து தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வரவழைத்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து இங்கிலாந்து தூதரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பாக இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்தோர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி களுக்கு பதிலடி கொடுக்கும் வகை யில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திலும் தேசியக் கொடியை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நேற்று முன்தினம் அகற்றி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.