ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் பணி முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்பிய நிலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேவந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நில அதிர்வு அடங்கி எந்த பாதிப்புகளும் இல்லை என தெரிந்தபிறகே வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வீடுகளில் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் சுவற்றில் மாட்டியிருப்பவை ஆடியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி போன்ற அடுக்குமாடி மற்றும் மக்கள்தொகை நெருக்கமாக உள்ள இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நில அதிர்வு உணரப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.5 லிருந்து 6.8 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக் ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தில் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6.8 என்கிற சக்திவாய்ந்த நில நடுக்கமானது 156 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் அதன் அதிர்வானது அதனை சுற்றிய பரப்பில் 1000 கி.மீ வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்கிற அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் காரணமாக தஜிகிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 என்கிற மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM