சென்னை: ‘வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது?’ என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், வேப்பன்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்னமும் தொலைதூர கனவாகவே உள்ளது. பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும், வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.பின்னர் அவர், “இந்த வழக்கு தொடர்பாக 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. மனித கழிவுகள் கலக்கப்பட்டது தொடர்பாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தெரியவந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது?’ என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.