வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது? என சென்னை உயர் நீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது.
குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் பல அரசியல் காட்சிகள் அழுத்தம் கொடுத்த நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
தொடர்ந்து 3 மாதமாக விசாரணை செய்துவரும் சிபிசிஐடி போலீசார், தற்பொழுது வரை யாரையும் கைது செய்யவில்லை.
இந்த நிலையில், இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.