தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக அரசு அமைந்ததிலிருந்து வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இரு முறை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாவது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த வேளாண் பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஏழு தனியார் கரும்பாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 50,000க்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட கரும்பு ஆலைகளை திறக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இது போன்ற நிலை உருவாகிவிடாமல் தடுக்கப்பட வேண்டும்.
இயற்கை விவசாயத்தை காக்கும் பொருட்டு ஆந்திர மாநிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படுகிறது. அதே போல் தமிழ்நாட்டிலும் உதவித் தொகை வழங்கினால் இயற்கை விவசாயமும் காக்கப்படும், விவசாயிகளும் காக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
அதே போல் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பல நேரங்களில் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது. பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு கடந்த முறை ரூ.2,399 கோடி ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் தொகை விவசாயிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் மத்தியில் உள்ளன.
இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் மார்ச் 23, 24 மற்றும் மார்ச் 2, 28 ஆகிய நான்கு நாள்கள் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். மார்ச் 29ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும்.