தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24 இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் விவசாய நிலம், விளைபொருட்கள், விவசாயிகள், இளைஞர்கள், பயிற்சிகள், ஊக்கத்தொகை என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
விவசாயிகளுக்கு பரிசு
அந்த வகையில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு என்ற அறிவிப்பு மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக வேளாண் பட்ஜெட்டில், நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு 5 லட்ச ரூபாய் பரிசை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதேசமயம் அனைத்து பயிர்களுமே அரவணைக்க தக்கவை.
சிறுதானியங்கள், பயறு வகைகள்
இதை அடிப்படையாக கொண்டு நெல்லுக்கு வழங்கி வந்ததை சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றுக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் விரிவுபடுத்தப்படுகிறது. வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரை வாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அலுவலர்களுக்கு விருதுகள்
இதேபோல் உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தி திறனில் சிறந்து விளங்கும் களப் பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில் முனைவோர்
அதாவது, வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற கல்வியை கொண்டு சொந்த காலில் நிற்க மற்றும் தொழில் முனைவோராக பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். இதற்காக வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு லட்ச ரூபாய் வீதம் நிதியுதவி வழங்க 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முழு மானியத்தில் மரக்கன்றுகள்
இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 75 லட்சம் செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர் மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதற்காக மத்திய – மாநில அரசு நிதியில் இருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.