வேளாண் பட்ஜெட் 2023-2024: முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவான விவரம்!

தமிழக சட்டப்பேரவையில் 2023 – 2024க்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார்.
தொடர்புடைய செய்தி: TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
இதனைத் தொடர்ந்து 2023 – 2024க்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பச்சைத் துண்டு அணிந்து வந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். மேலும், பட்ஜெட் நகலை வைத்து அவர் மரியாதை செலுத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சம்கள் குறித்தும், அமைச்சர் பேசியது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

“வேளாண்மையை நாம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. ஆனால் இன்று இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது. விவசாய நிலங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை.
தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது நமக்கு முக்கிய சவாலாக உள்ளது. அந்தவகையில் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவதுதான். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு.
* தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன; டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
* பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்.
* 2021- 22-ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது; வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்; 127 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்.
* சிறுதானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 2,504 கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; 25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண்மை நிதி நிலை அறிவிப்புகள் 2023- 24 pic.twitter.com/Jl31Xx4ULG
— Department of Agriculture, TamilNadu (@agridept_tn) March 21, 2023

* ரூ.50 லட்சம் நிதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்; சிறுபாசன கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும்; விளைப் பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்; அங்கக வேளாண்மை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்; சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்; வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு கருவிகள் விநியோகிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்; சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 இலட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது#CMMKSTALIN #TNDIPR#TNBudget2023#TNAgriBudget2023@CMOTamilnadu @mkstalin@MRKPanneer@mp_saminathan @ptrmadurai pic.twitter.com/AEJjcYMK8b
— TN DIPR (@TNDIPRNEWS) March 21, 2023

* வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்; சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்; உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; ஆதிதிராவிட பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும்; பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர ரூ.205 கோடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு தொடங்கப்படும்; எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.

வட்டார அளவில் வாட்ஸ்அப் (Whatsapp) குழு#CMMKSTALIN #TNDIPR#TNBudget2023#TNAgriBudget2023@CMOTamilnadu @mkstalin@MRKPanneer@mp_saminathan @ptrmadurai pic.twitter.com/1087wm1Qa0
— TN DIPR (@TNDIPRNEWS) March 21, 2023

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.