புதுடெல்லி: லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரி, பாஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி செய்கின்றனர். இதனால் 6 நாட்கள் தொடர்ச்சியாக அவை முடங்கிய நிலையில், நேற்றும் இரு அவையிலும் கடும் அமளி நீடித்தது. மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே எழுந்து பேச முற்பட்ட போது, அவரை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மக்களவையிலும் பாஜ எம்பிக்கள் அமளி செய்ததால், அவை 7வது நாளாக முடங்கியது. அமளிக்கு இடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான ரூ.1.118 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது. இன்று யுகாதி, குடிபத்வா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதால் எம்பிக்களின் கோரிக்கையை ஏற்று இரு அவைகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடும்.
முன்னதாக, நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாத வரை ஓய மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ராகுல் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என பாஜவினரும் கூறியதால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.