புதுடெல்லி: ஏழு வயது குழந்தையை கொலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு 7 வயது குழந்தையை கடத்தி ரூ.5 லட்சம் பிணைத்தொகை கேட்டுள்ளார். குழந்தையின் பெற்றோர் வழங்காததால் குழந்தையை அவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2013-ம் ஆண்டு சுந்தரராஜனுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
தூக்கு தண்டனையை எதிர்த்து சுந்தரராஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதன்படி, இந்த மனு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், ”கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்களில் சுந்தரராஜன் செய்த குற்றத்தை சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை. ஒரு குழந்தை படுகொலை செய்யப்பட்ட குற்றம் கொடூரமானது. இருப்பினும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் முன், தண்டனையைக் குறைத்து விதிப்பதற்கான வாய்ப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை. அதோடு, நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பை அளிக்கவில்லை. எனவே, சுந்தர்ராஜனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு பெயில் மூலம் அவ்வப்போது வெளியே வந்து ஆண்டுகளை கழிப்பது அல்ல. தொடர்ந்து 20 ஆண்டுகள் அவர் சிறையிலேயே இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.