உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ், உக்ரைன் – ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்த நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
உலகளவில் அமேசான் நிறுவனத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு மாத இடைவெளியில், மேலும் 9 ஆயிரம் பேரை நீக்க இருப்பதாக அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்துள்ளார்.
பொருளாதாரம் நிலையற்ற சூழலில் இருப்பதால் செலவுகளையும், பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது கடினமான முடிவு என்றாலும், நிறுவனத்தின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் நிறுவனத்தில் க்ளவுட் கம்ப்யூடிங் (cloud computing) மற்றும் விளம்பரப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் நீக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், எந்த நாட்டில் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளது என்பது குறித்து அமேசான் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.