வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார் . அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கே உரிய வேளாண் பொருள்கள் என்ற வகையில் பல பொருட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் விளையும் பொருள் மற்றொரு மாவட்டத்தில் விளைவதில்லை. அந்த சிறப்புள்ள வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலக அளவில் சந்தையில் இடம் பெற செய்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும்.
புவிசார் குறியீடு என்பது, பிராந்திய அளவில் தனித்துவமிக்கப் பொருளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வழங்கப்படுவதாகும். இதன் மூலம் குறிப்பிட்ட பொருட்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற முடியும். மேலும் இதன் மூலம் அப்பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அது மட்டுமன்றி தனித்துவ அடையாளத்தின் மூலம் விற்பனை சந்தையில் போலிகள் மத்தியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் சாத்தியமாகும்.
கடந்த ஆண்டில் சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு பூவிசார குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் ஆண்டிலும் கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு ரூ.30 லட்ச மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.