தமிழகத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோன பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதனிடையே சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி மத்திய அரசு அவசர கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வேகமாக கொரோனா அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.