ChatGPT -ன் எழுச்சியினால் பலர் நம்பிக்கையற்ற உணர்வை அனுபவித்து வருகின்றனர். அனைத்து வகையான வேலைகளும் இந்தத் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படலாம் என்ற பயம் பலருக்கும் உருவாகியுள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் சில செயற்கை நுண்ணறிவுகளின் வளர்ச்சியினால் உருவாகும் கவலை புதியது இல்லை என்றாலும் chatGPT -யின் வருகை இந்தக் கவலையை பெரிதும் அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு புதிதாக வேலைகளை உருவாக்கும் என பலர் பல உறுதி அளித்தாலும், உண்மையில் இதன் வளர்ச்சி மனிதர்களிடையே கவலையையே அதிகரித்துள்ளது. பணியாளர்கள் முதல், மேலாளார்கள் வரை செயற்கை நுண்ணறிவால் ஒருநாள் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றே நினைக்கின்றனர். இந்த கவலையை AI பதற்றம் (AI anxiety) என்று குறிப்பிடுகிறது மருத்துவ உலகம்.
ஏற்கெனவே ChatGPT மனிதர்கள் செய்யும் தரவு உள்ளீடு (Data Entry) உரை சரிபார்த்தல், மொழிபெயர்த்தல், கணிதம், சந்தை ஆராய்ச்சி, பயணங்களை ஒழுங்கமைத்தல், கட்டுரை எழுதுதல் ஆகிய வேலைகளைச் செய்து வருகிறது. ஊடகங்கள் தொடங்கி சில துறைகள் ஏற்கெனவே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு அதிகமான செய்தி அறைகள் AI உதவியால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை இணைக்கத் தொடங்கிவிட்டன.
மறுபுறம் கலைஞர்கள் முதல், போலீஸ் அதிகாரி, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் என செயற்கை நுண்ணறிவால் இன்னும் செய்ய முடியாத வேலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா காலத்திலும் ஒவ்வொரு பெரிய புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் மனிதர்கள் இயற்கையாகவே தங்கள் எதிர்காலம் மற்றும் வேலை பற்றி பயப்படுகின்றனர்.
இந்தப் பதற்றம் 18-ம் நூற்றாண்டு முதலே உள்ளது. எந்திரங்கள் தொடங்கி கணினியும் இதே அச்சத்தையே தூண்டியது. தற்போது இந்த AI சற்றுஅதிகமாக கவலையைத் தூண்டுவதால் இது ஒருவித மனநோயாகவே கருதப்படுகிறது.