திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காதலியின் முன்பு கெத்து காட்டுவதற்காக , வெட்டுக்கத்தியுடன் உள்ளே புகுந்து அறநிலையத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கருப்பு சட்டை இளைஞரை கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளி பிரகாரத்தில் ராஜ கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பேய கோபுரம் என நான்கு கோபுரங்கள் உள்ளது. இதில் பேய கோபுரம் எப்போதும் மூடப்பட்டு உள்ளது. மற்ற மூன்று கோபுரங்களிலின் நுழைவாயிலிலும் காவலர்கள் சுழற்சி முறையில் பக்தர்களை சோதனை செய்து உள்ளே அனுப்புவது வழக்கம்.
இந்த நிலையில் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் வழியாக கருப்பு உடை அணிந்த அப்பு என்கிற போதை இளைஞர்,கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்தார் . அவருடன் கருப்பு சுடிதார் அணிந்த பெண்ணும் வந்திருந்தார். பக்தர்களை மிரட்டியபடி விரட்டியதால் பக்தர்கள் பீதி அடைந்து நாலா புறமும் சிதறி ஓடினர்.
கோவிலில் உள்ள இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்த போதை ஆசாமி அங்கிருந்த கண்ணாடி கதவுகளை சுக்கு நூறாக அடித்து நொருக்கி உள்ளான். கோவில் நிர்வாக அலுவலக ஊழியர்கள் பதறியபடி அலுவலகத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
கோவிலின் இணை ஆணையர் அறைக்குள் நுழைந்து இணை ஆணையரின் இருக்கையில் கத்தியுடன் அமர்ந்து கொண்டு அந்த போதை இளைஞர், ஊழியர்களை மிரட்டியபடி இருந்தான்.
சிலர் தன்னை செல்போனில் படம் பிடிப்பதை கண்டதும் மீண்டும், அங்கு மிச்சம் மீதி இருந்த கண்ணாடிகளையும் அடித்து உடைத்தான்
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடிக்க முயற்சிக்காமல் தயங்கியபடியே நின்று அவருடன் பேச்சுவர்த்தை நடத்தினர்
அதற்குள்ளாக இளம் பக்தர்கள் பலர் ஒன்று திரண்டு போதை இளைஞரை விரட்டியதால் கீழே குதித்து தப்ப முயன்றவன் வசமாக சிக்கினான். அவனை நையப்புடைத்து ஆடைகளை கிழித்து உள்ளாடையுடன் வெளியே அழைத்து வந்தனர்.
போலீசார் முன்பு அந்த அரை நிர்வாண கஞ்சா குடிக்கியை ஒப்படைத்தனர், அப்போதும் போதையில் போலீசாரை எகத்தாளமாக பார்த்தபடி தரையில் படுத்திருந்தான்
தப்பி ஓட முயன்ற அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், இருவரும் பெங்களூரில் இருந்து வந்ததாகவும், அவன் தனது காதலன் அப்பு என்றும் தன்னுடைய செல்வாக்கை காட்டுவதாக கூறி போதையில் இப்படி செய்தது தெரியவந்தது.
காலில் ஏற்பட்ட காயத்துடன் காணப்பட்ட போதை ஆசாமி அப்புவுக்கு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலையார் கோவிலின் மூன்று நுழைவாயிலிலும் காவல்துறையினர் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கும் நிலையில் வெட்டுக் கத்தியுடன் போதை ஆசாமி கோவிலுக்குள் நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.