Thoothukudi Crime News: எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண் உட்பட 3 பேரை உடனடியாக கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பாரத் என்பவர் கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் பின்னால் அமர்ந்திருந்த அந்த மாணவரை ஆசிரியர் பாரத் முன்னாள் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் எழுந்து வரும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நேற்றைய முன்தினமே அந்த மாணவனின் பாட்டி ஆசிரியர் பாரத்தை சத்தம் போட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் ஆசிரியர் பாரத் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த அந்த மாணவனின் பெற்றோரானா முனியசாமி – செல்வி மற்றும் மாணவனின் தாத்தா – பாட்டி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் அவரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மாணவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.