The Elephant Whisperer ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதற்கு பிறகு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த முகாமின் சிறப்புகள் என்ன, யானைகள் இங்கு இவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
ஆஸ்கர் விருதுக்கு பின் கவனம் பெறும் தெப்பக்காடு!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் படமாக்கப்பட்ட The Elephant Whisperer திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்றது. இதன் மூலம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் சர்வதேச அளவில் பிரபலமடைந்து இருக்கிறது. ஆவண படத்தைப் பார்த்த பிறகு வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினம் தோறும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்கு வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் முறையை கண்டு வியந்து செல்கின்றனர்.
நூற்றாண்டுகள் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம்!
தற்போது சர்வதேச கவனத்தை பெற்றுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், நூற்றாண்டுகள் பழமையானது. ஆசியாவிலேயே பழமையான வளர்ப்பு யானைகள் முகமாக, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் திகழ்ந்து வருகிறது. தற்போது யானைகளை பராமரிக்க கூடிய முகாமாக உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், துவக்கத்தில் மரங்களை தூக்குவதற்காக, யானைகளை பராமரிக்கும் இடமாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் முதுமலை வனப்பகுதியில் வளர்க்கப்பட்ட தேக்கு உள்ளிட்ட மரங்களை வெட்டி, அதனை இழுத்து செல்வதற்காக இந்த முகாமில் இருந்த யானைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், யானைகளை பராமரித்து வரும் பழகுடியினர்களே அப்போதும் இங்கு பணியாற்றினர். அந்த காலகட்டங்களில் வனப்பகுதிகளில் குழிகளை வெட்டி ஆண் யானைகள் பிடிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு முறைகளை பயன்படுத்தி காற்றில் உள்ள யானைகள் பிடிக்கப்பட்டு, முகாமில் பழக்கப்படுத்தப்பட்டு மர வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
சுதந்திரத்திற்கு பின் தெப்பக்காடு யானைகள் முகாம்!
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, யானைகளை பாதுகாக்க திட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, தெப்பக்காடு வளர்ப்பு பயணிகள் முகாம் முழுக்க முழுக்க யானைகளை பராமரிக்க மற்றும் பாதுகாப்பதற்கான ஒரு இடமாக மாற்றப்பட்டது. தற்போது இந்த முகாமில் புதிதாக வந்த குட்டி யானையோடு சேர்த்து 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள அனைத்து யானைகளும் அரசு செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முகாமில் 4 வகையான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
1. ஆங்கிலேயர் காலத்தில் பிடிக்கப்பட்ட யானைகள்.
2. கோவில்களில் பராமரிக்க முடியாமல் மீட்கப்பட்ட யானைகள்.
3. யானை மனித மோதலுக்கு காரணமான யானைகள்.
4. தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானைகள்.
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் யானைகள், பெரும்பாலும் தங்களது நேரத்தை வனப்பகுதிக்குள்ளேயே கழிக்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே உணவு வழங்குவதற்காக முகாமிற்கு அழைத்து வரப்படுகின்றன. அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2 மணி நேரத்திற்கு குறைவாக மட்டுமே இந்த யானைகள் முகாமில் வைக்கப்படும். மீத நேரம் முழுவதும் யானைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் விடப்படும். குறிப்பாக முகாமில் உள்ள பெரும்பாலான பெண் யானைகள் இரவு நேரம் முழுவதையும் வனப்பகுதிக்குள்ளேயே கழித்து வருகின்றன.
அங்குசம் பயன்பாடு 100% தடை
முகாமில் உள்ள கும்கி யானைகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் யானை – மனித மோதல்களை தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முகாமில் யானைகள் சவாரி இருந்த நிலையில், தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் வளர்ப்பு யானைகளை கட்டுப்படுத்த அங்குசம் எனப்படும் கம்பி பயன்படுத்தப்படும். ஆனால் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை பொருத்தவரைக்கும் அங்குசம் பயன்பாடு 100% தடை செய்யப்பட்டிருக்கிறது. வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பழங்குடியின மக்களும், திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர்.
முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கும்கி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகள், தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவந்து பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு அங்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தெப்பக்காடு வளர்ப்பு யானையின் முகாம், யானைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக திகழ்ந்து வருகிறது. இந்த முகாமை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு சமீபத்தில் 7 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM