ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஆகியவை உள்ளன. இந்நிலையில் நீலகிரி உயிர் கோள காப்பகத்தை தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80.567 ஹெக்டேர் வனப்பகுதியில் தந்தை பெரியார் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமையவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த சரணாலயம் அமைந்தால் தமிழகத்தில் உருவாகும் 18-வது சரணாலயமாக இது இருக்கும்.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, இம்மாவட்டம் அதிக வனப்பகுதிகளைக் கொண்டவை. இந்த வனங்களில் புலிகள், சிறுத்தைகள், மான்கள், பறவைகள், விலையுயர்ந்த மரங்கள், மூலிகைச் செடிகள் போன்றவை வளர்கின்றன. மேலும், இங்கு காடுகளை ஒட்டி மலைவாழ் மக்களும் அதிக அளவில் வாழ்கின்றனர். அவர்கள் வனப்பகுதியையொட்டியுள்ள நீர்நிலைகள், குளங்களைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக அரசின் அறிவிப்பு பற்றிப் பேசியுள்ள வனத்துறை அதிகாரிகள், “கர்நாடகா மாநிலத்திலிருந்து அந்தியூர் வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு, புலிகள் இடம் பெயர்வது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 9 புலிகள் அந்தியூர் வனப்பகுதியில் நடமாடியிருப்பது வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. புலிகள் நடமாட்டத்தில் இடையூறுகளை தவிர்க்க இந்தப் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கப் படுகிறது. இதோடு சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் உள்ளிட்டவையும் அதிகம் வசிக்கின்றன.
ஈரோடு வனக்கோட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர், சென்னம் பட்டி பகுதிகள் முழுமையாகவும் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் சில பகுதிகளை இணைத்து புதிய சரணாலயம் அமைக்கப்படவுள்ளது. எந்தப் பகுதிகளை இணைப்பது என்பதை வனத்துறை உயர் அதிகாரி நேரில் வந்து ஆய்வு செய்வர். மேலும், வனப்பகுதி அல்லாத சில பகுதிகளையும் சரணாலயத்துடன் இணைக்கும் சூழல் உருவானால் அங்கு குடியிருக்கும் மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
மனித – விலங்கு மோதலை தடுக்கும் வகையில் இந்த சரணாலயம் அமையும். சரணாலயத்தை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. சரணாலயம் தொடர்பாக வன அதிகாரிகளிடம் முறையான ஆலோசனை நடத்தி விரிவான அறிக்கையை அரசு சமர்ப்பிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.