இதை செய்தால் போதும்.. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் -ஒ.பன்னீர்செல்வம் உறுதி

AIADMK News: அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், 1977ல் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம்,  வகித்த பதவிகளை பட்டியலிட்டார்.  கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக பன்னீர்செல்வம் முக்கிய பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிப்பதாகவும் வாதத்தை முன்வைத்தார்.

கட்சியிலிருந்து நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும் ஜூலை 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும், பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது எனவும் தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் ஜூன் 23 பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகள் பற்றியும், ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகள் பற்றியும் விவரித்த பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், இரட்டை பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை என்பதால் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், எந்த விவாதமும் நடத்தப்படாமல் தங்களை கட்சியில் இருந்து நீக்க பொது குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும், ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதிகள் இல்லை என்றும் வலியுறுத்தினார். பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காகவே முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஒ.பி.எஸ். தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மக்களும், கட்சியினரும் விரும்புகிறார்கள் என எந்த புள்ளி விவரங்களும் இல்லாமல், கருத்துக்கணிப்பு நடத்தாமல் பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது. பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்.ஜி.ஆர். விதிகளை வகுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது அந்த பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அதற்காகவே கட்சியில் தொண்டர்கள் ஆதரவுடன் முக்கிய பதவியில் உள்ள தன்னை நீக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

பொது செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனைகளை நீக்கினால் பொது செயலாளர், அந்த பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாகவும், அதில் தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும் ஒ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், தேர்தலை எதிர்த்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால், இன்றைய தேதி வரை இடைக்கால பொது செயலாளர் என்ற பதவி என்பதே இல்லை எனத் தெரிவித்தார். எந்த காரணமும், எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாக தெரிவித்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் படி மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் நிறைவடைந்த பின்னர் பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளது. வழக்கில் வாதங்கள் பிற்பகலும் தொடர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.