புதுடெல்லி: “இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதானது; பாதுகாப்பானது; வெளிப்படையானது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 6ஜி தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்ட அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச தகவல் தொழில்நுட்ப பொதுச் செயலாளர் டொரீன் போக்தன் மார்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”5ஜி மொபைல் தொழில்நுட்பத்தை இந்தியா விரைவாக அறிமுகப்படுத்தி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய 6 மாதங்களுக்குள் நாம் தற்போது 6ஜி தொழில்நுட்பம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு 120 நாட்களுக்குள் அதன் சேவை 125 மாநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 4ஜி தொழில்நுட்பத்திற்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரு நாடாக மட்டுமே நாம் இருந்தோம். தற்போது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக நாம் மாறி இருக்கிறோம்.
நாட்டில் புதிதாக 100 5ஜி ஆய்வகங்கள் விரைவில் அமைய இருக்கின்றன. இந்தியாவின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ப 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தக்கூடிய பணிகளை இந்த ஆய்வகங்கள் மேற்கொள்ளும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாடல் என்பது எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கிறது. இந்த 10 ஆண்டுகள்(decade) என்பதை நாம் ‘Techade’ என குறிப்பிடலாம்.
கடந்த 2014ல் நாட்டில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. அது தற்போது 85 கோடியாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் 25 லட்சம் கிலோ மீட்டர் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய சேவையை வழங்குவதற்காக 5 லட்சம் பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.