வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் கோடி,m கோடியாகப் பணமும், கிலோ, கிலோவாகத் தங்கம்,வெள்ளி முதலியவற்றையும் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வாரிச்செல்வது, நமக்கு வழக்கமான செய்திகள் ஆகி விட்டன. ஒருவர் வீட்டில் சோதனை என்று சொல்லி, ஒன்பது வீடுகளில் சோதனை நடத்தும்போதுதான்,அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை வீடுகள் வைத்திருக்கிறார்கள் என்பதே நமக்குத் தெரிய வருகிறது. இது இன்றைய ‘ஹைடெக்’ நிலையென்றால், இதே மண்ணில் எத்தனையோ உயர் பொறுப்புகளையெல்லாம் வகித்தவர்கள்கூடச் சொந்த வீடின்றி, வாடகை வீடுகளிலேயே காலந்தள்ளிச் சென்ற கனிந்த வரலாறுகளும் உண்டு.
அப்படிப்பட்ட ஒருவரைப்பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
இவருக்குச் சின்ன வயதிலிருந்தே துணிச்சல் அதிகம். இளம் வயதிலேயே இறந்து விட்டார் தந்தை. அதற்காக அயர்ந்து அமர்ந்து விடவில்லை. காசைக் கொடுக்காத இறைவன் கடினமான மனத்தைக் கொடுத்திருந்தான்; பணத்தைத் தராத கடவுள் பயமற்ற இதயத்தைக் கொடுத்திருந்தார்.
கங்கைக்கு அக்கரையில் பள்ளி. படகுக்காரர் கேட்கும் தொகை கையிலில்லை. ஆனால் அந்தக் கைகளையும், காலையும் பயன்படுத்தி அக்கரைக்குச் செல்லும் ஆற்றல் நிறையவே இருந்தது. படிக்க வேண்டுமென்று பதிந்து போன எண்ணம் படகாய் ஆக்கியது அவரை. ’உண்மையாய் உழைப்பவர்களுக்கு நீரிலும் நான் தெப்பமாக உதவுவேன்’ என்று இறைவன் சொன்னது உண்மைதானே. (இந்த நிலையிலேயே இவர் யாரென்று கண்டு பிடிப்பவர்கள், இந்திய சுதந்திர வரலாற்றை நன்கு அறிந்தவர்களாக இருக்கக் கூடும்.)
அப்படித்தான் இவர் படித்தார். சிறிய வயதிலேயே காந்தியடிகளால் கவரப்பட்டார். ’நாடும்,மக்களுமே எல்லாவற்றுக்கும் மேல்’ என்பதுதானே காந்தீயத் தத்துவம். அதனை உறுதியாக மனதில் ஏற்றார். உறுதியான வைராக்கியமே மனித மனத்தை ரத்தினக்கல் போல் கடினமாக்குகிறது. சாதாரண மனிதர்களின் வைராக்கியத்தில் மூன்று வகை உண்டாம். பிரசவ வைராக்கியம்; இதிகாச வைராக்கியம் மற்றும் மயான வைராக்கியம்.
முன்னதில், பிரசவ வலியால் துடிக்கும்போது பெண்கள் இனி கணவனைப்பற்றி நினைக்கவே கூடாது என்று எண்ணுவார்களாம். அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பிறந்ததும், கணவன்தான் முதலில் பார்க்க வேண்டுமென்று ஆசைப் படுவார்களாம். வைராக்கியத்திற்கு டாடா.
நாடகத்தில், ராமன் காடு ஏக,பரதன் அவன் காலணிகளை அரியாசனம் ஏற்ற, சே.. இனி அண்ணன், தம்பியிடம் சண்டை போடக் கூடாது என்று எண்ணுபவர்கள்,வீடு வந்து சேர்ந்ததும் அரிவாளைத் தேடுவார்களாம். வைராக்கியத்திற்கு குட் பை.
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடலில் உள்ள அத்தனையையும் உருவி எடுத்து விடுவதைப் பார்க்கின்ற உறவினர்கள், ப்பூ…இதற்குத்தானா இவ்வளவு பாடும்.. என்று நினைப்பார்களாம். ஆற்றில் தலையை முழுகி விட்டுக் கரையேறியதும் அடுத்த வீட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை வந்து விடுமாம். வைராக்கியம் ஆற்றோடு போயிற்றாம்.
நம் வைராக்கியமெல்லாம் இந்த மூன்றைப் போன்றதுதான். ஆனால் பெரியவர்களின் வைராக்கியம் வைரத்தைப் போன்று திண்மையானது. குறிக்கோள் நிறைவேறும்வரை குறைபடாதது.
அவர் நாடு சுதந்திரம் பெற வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார். இளமையில் தொடங்கிய அந்த உறுதிப்பாடு,நாளாக நாளாக வளர்ந்து கொண்டே வந்தது. வாலிபம் வந்ததும் வீச்சு பெற்றது. இரண்டொரு முறை சிறை சென்றார்.
திருமணமாயிற்று. குழந்தைகளும் பிறந்தார்கள். சுதந்திர வேட்கை உச்சத்தை எட்டியது. ’வெள்ளையனே வெளியேறு ’என்ற காந்தியின் கோஷம் வலுத்தது.சிறைகள் நிரம்பின.அவரும் சிறை சென்றார். குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சொற்பத் தொகையைப் போராட்ட வீரர்களுக்குக் கட்சி வழங்கி வந்தது.
சில மாதங்கள் சென்ற பிறகு அவர் மனைவிக்குக் கடிதம் எழுதினார். ’கட்சி உங்களனைவரையும் கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே பசி பட்டினி இன்றி இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். குழந்தைகள் மற்றும் உன் நலத்திலும் கவனம் செலுத்து. இன்னும் சில மாதங்களில் நான் விடுதலை ஆகி வந்து விடுவேன்.’ என்று சுருக்கமாக ஒரு கடிதத்தை எழுதினார்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவருக்கு மனைவியிடமிருந்து பதில் வந்தது. அதில், அனைவரும் நலமாக இருப்பதாகவும், குழந்தைகள் நன்கு படித்து வருவதாகவும் எழுதி விட்டு, மேலும் ஒரு விபரத்தை எழுதியிருந்தார்.
‘கட்சி தரும் பணத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து நான் மாதம் 3 ரூபாய் சேமித்து வருகிறேன். இதுவரை ரூ12 சேர்ந்துள்ளது. அதை மூலதனமாகக் கொண்டு நாம் ஏதாவது செய்யலாம். எனவே நீங்கள் கவலையின்றி இருக்கவும்’ என்று எழுதியிருந்தார்.
அதனைப் படித்த அவருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. ’என்ன அநியாயம் இது. பொதுப் பணத்தை இப்படியா விரயம் செய்வது?
தன் வீட்டுக்கு மாதாமாதம் பணம் அனுப்பும் அந்த அலுவலகத்தின் செயலருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
‘அன்பு நண்பரே. வணக்கம்.
தாங்கள் என் குடும்பச் செலவுக்காக பிரதி மாதம் பணம் அனுப்புவது குறித்து மகிழ்ச்சி.
தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்த மாதத்திலிருந்து அதில் 3 ரூபாயைக் குறைத்து அனுப்பவும். அந்த 3 ரூபாய் இல்லாமலே என் மனைவி குடும்பத்தை நன்கு கவனித்துக் கொள்வார்கள்.
பொதுப் பணத்தைத் தேவைக்கதிகமாக செலவு செய்யக் கூடாது என்பதைத் தாங்களும் அறிவீர்கள்தானே.’
என்று கடிதம் எழுதி அதையும் தபாலில் சேர்த்த பிறகே அவர் அமைதியடைந்தாராம்.
இப்படிப்பட்ட நேர்மையாளர்களையும் இந்தப் புண்ணிய பூமிதான் சுமந்து நின்றிருக்கிறது.
பொது நிதி எப்படி செலவு செய்யப்பட வேண்டுமென்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம்.
‘ஊரான் வீட்டு நெய்யே.என் பெண்டாட்டி கையே.’என்பதல்லவா இன்றைய உலக நியதியாக இருக்கிறது.
இவர் போன்ற தலைவர்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும்.
இருக்கின்ற இளைஞர்கள் இவர் போன்ற தலைவர்கள் அடியொற்றி வாழப் பழக வேண்டும்.
‘Men may come
And men may go
But I go on
For ever’
என்ற நீரோடை போல,இந்த உலகம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது.
அப்பொழுது நல்ல மனிதர்களால்தான் அது புனிதமடையும்.
அந்தப் புனிதம் நம் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதுதான் எம் போன்றோரின் பேரவா.
வழக்கம்போல் இவர் யாரென்பதை அறிந்தவர்கள் ‘கமெண்ட்ஸ்’ பகுதியில் எழுதுவார்கள் என்பதால் நான் இவர் யாரென்று கூறவில்லை.
என்றும் மாறா அன்புடன்,
-ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.