ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் நள்ளிரவு வரை நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டில், பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது செய்த முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், 2016ல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றினார். அப்போது அங்குள்ள நகராட்சி பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டியது, கொசு மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்நது. இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு பெரியார்நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆணையாளர் சிவக்குமாரிடம் வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை போலீசார் கேட்டு பெற்றனர். சோதனையில் பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. அதன்பின் லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டு சென்றனர்.