நியூயார்க்: காலநிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம், காலநிலை மாற்றம்,அதிதீவிர வளர்ச்சியினால் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், அதிகப்படியான நுகர்வு மற்றும் மாசுபாட்டின் காரணமாக நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது . அதே சமயம் காலநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கி வருகின்றன. ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் நெருக்கடியில் வாழ்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் பொதுச் செயலார் அண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “மனித குலத்தின் உயிர் நாடியான நீர் மாசினாலும், காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.